பாமக நிறுவனர் ராமதாஸ் விஜயின் தவெகவுக்கு ஆதரவு அளிக்க விசிக-விடம் கோரிக்கை
சென்னை, 09 மே (ஹி.ச) கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியாக 108 இடங்களில் வென்றாலும் விஜய்யின் தவெக ஆட்சி அமைப்பதற்கான சிக்கல் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஆட்சி அமைப்பதற்குப் பெரும்பான்மை கிடைக்கா
பாமக நிறுவனர் ராமதாஸ் விஜயின் தவெகவுக்கு ஆதரவு அளிக்க விசிக-விடம் கோரிக்கை


சென்னை, 09 மே (ஹி.ச)

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியாக 108 இடங்களில் வென்றாலும் விஜய்யின் தவெக ஆட்சி அமைப்பதற்கான சிக்கல் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஆட்சி அமைப்பதற்குப் பெரும்பான்மை கிடைக்காததால் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க முயன்று வருகிறார்.

விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்று போக தமிழக வெற்றிக் கழகம் 107 எம்எல்ஏக்கள் வைத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் 5, இடதுசாரிகளான சிபிஎம், சிபிஐ தலா இரண்டு என மொத்தம் 9 எம்எல்ஏக்கள் ஆதரவு விஜய்க்கு கிடைத்துள்ளது.

ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டுமென்ற நிலை உருவாகியுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் இன்று காலை தன்னுடைய நிலைப்பாட்டை சொல்ல இருப்பதாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் தமிழக ஆளுநர் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தமிழகத்தில் உள்ள பல கட்சிகளிடம் ஆதரவு நல்கியத்தில் அதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் அவர்களது ஆதரவு கடிதங்களை கொடுத்துள்ளது.

இந்த ஆதரவுகளை கொடுத்தும் தமிழக ஆளுநர் அவர்கள் 118 உறுப்பினர்களுக்கான ஆதரவு கடிதங்களை கொடுத்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்று திரும்பத் திரும்ப திருப்பி அனுப்புவது ஆளுநர் அவர்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்தில் இருப்பது தெரிகிறது. ஆளுநர் அவர்களை வைத்து பின்புலத்தில் இருந்து கொண்டு பாஜக ஆளுநரை இயக்குவதாக பெரும்பான்மையான மக்களால் பேசப்பட்டு வருகிறது.

மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்க வேண்டியது அனைவரின் கடமையாகும். அந்த கடமையை மதித்து தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை மனதில் கொண்டு தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ள த.வெ.க வை ஆட்சி அமைக்க ஆளுநர் அவர்கள் அழைக்க வேண்டும். இதை தாமதப்படுத்தக் கூடாது. உடனே அழைக்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தமிழக நலன் கருதி ஆதரவளித்துள்ள நிலையில், தமிழகத்தின் நலன் கருதி தமிழக மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசியல் செய்து வருகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அவர்கள் ஆதரவை அளிக்க வேண்டும்.

அவரது ஆதரவை அளிக்கும் பட்சத்தில் தமிழக ஆளுநர் அவர்கள் விஜயை அழைத்து தமிழக முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

இப்போது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு தம்பி திருமாவளவன் அவர்கள் உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்து தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சியை ஏற்படுத்தி ஒரு மாற்றத்தை தமிழக மக்கள் இடத்தில் கொண்டு வந்து தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு அவர் அளிக்கின்ற ஆதரவைக் கொண்டு அமைய உள்ள தமிழக அரசை சிறப்பாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கிட வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b