தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
சென்னை, 09 மே (ஹி.ச.) நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உள்ள நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற எண்ணிக்கையை அடைய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது காங்கிரஸ் கட்
Petition filed in the Supreme Court


சென்னை, 09 மே (ஹி.ச.)

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உள்ள நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற எண்ணிக்கையை அடைய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது

காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் தவெக-வின் பலம் 112 ஆனது.

சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் ஆகிய கட்சிகள் நேற்று நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதைத் தொடர்ந்து, பலம் 116 ஆக உயர்ந்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே 118 என்ற இலக்கை எட்ட முடியும். விசிக தலைவர் திருமாவளவன் இன்று மாலை தனது முடிவை அறிவிக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநர் மறுத்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இரண்டு முக்கிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த எழிலரசி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தான் தற்போது மிகப்பெரிய கட்சியாக உள்ளது.

எனவே, அக்கட்சியின் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும். இது தொடர்பாகத் தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உரிய உத்தரவை விரைந்து பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை முன்வைத்து ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி (முன்னாள் ஐ.ஜி.) ராமசுப்பிரமணி என்பவரும் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ஒரு கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டியது ஆளுநரின் கடமை என்பதை வலியுறுத்தி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. தவெக தலைவர் விஜய் ஏற்கனவே ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஆனால், ஆளுநர் தரப்பிலிருந்து பெரும்பான்மையை நிரூபிக்கும் 118 உறுப்பினர்களின் பட்டியலைச் சமர்ப்பித்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்கள் மிக விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் தலையீடு இருக்குமா அல்லது ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட மறுக்குமா என்பதைப் பொறுத்தே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது முடிவாகும்.

Hindusthan Samachar / vidya.b