அமைச்சர் பெ.விஸ்வநாதன் வெல்க - காங்கிரஸ் எம்.எல்.ஏவிற்கு ஒட்டிய போஸ்டரால் மதுரையில் பரபரப்பு
மதுரை, 09 மே (ஹி.ச) தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியாக 108 இடங்களில் வென்றாலும் விஜய்யின் தவெக ஆட்சி அமைப்பதற்கான சிக்கல் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஆட்சி அமைப்பதற்குப் பெரும்பான்மை கிடைக்காததால் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் வ
Posters Affixed for a Congress MLA


மதுரை, 09 மே (ஹி.ச)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியாக 108 இடங்களில் வென்றாலும் விஜய்யின் தவெக ஆட்சி அமைப்பதற்கான சிக்கல் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

ஆட்சி அமைப்பதற்குப் பெரும்பான்மை கிடைக்காததால் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க முயன்று வருகிறார்.

விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்று போக தமிழக வெற்றிக் கழகம் 107 எம்எல்ஏக்கள் வைத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் 5, இடதுசாரிகளான சிபிஎம், சிபிஐ தலா இரண்டு என மொத்தம் 9 எம்எல்ஏக்கள் ஆதரவு விஜய்க்கு கிடைத்துள்ளது.

ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டுமென்ற நிலை உருவாகியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் தவெக ஆதரவு கோரியுள்ள நிலையில் இன்று திருமாவளவன் முடிவை தெரிவிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.

சென்னை அசோக்நகரில் உள்ள விசிகவின் தலைமை அலுவலகம் இன்று காலை முதலே பரபரப்பாக காணப்படுகிறது.

த.வெ.க-விற்கு ஆதரவு வழங்கியுள்ள காங்கிரஸ் கட்சியானது அரசாங்கத்தை நடத்துவதில் காங்கிரஸிற்கும் உரிய பங்கு இருக்க வேண்டும். அமைச்சரவையில் இட ஒதுக்கீடு மற்றும் கொள்கை முடிவுகளில் முறையான அதிகாரப் பகிர்வு

(Shared Responsibility) இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ.விஸ்வநாதனை அமைச்சர் என குறிப்பிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் விஜய் முதல்வராக அறிவிக்கப்பதாக சூழலில் இந்த போஸ்டர் பேசு பொருளாக மாறியுள்ளது.

மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 2,731 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தொகுதியான மேலூரில், தலித் சமூகத்தைச் சேர்ந்த விஸ்வநாதனை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்தது. முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகமுள்ள பகுதியில், தலித் வேட்பாளர் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b