Enter your Email Address to subscribe to our newsletters

அயோத்தி, 09 மே ( ஹி.ச.)
ஜேஷ்ட மாத கிருஷ்ண பட்ச அஷ்டமி தினமான இன்று, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி மந்திரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு ராமலல்லாவை தரிசித்து வழிபட்டனர்.
பஞ்சாங்கப்படி இன்று பிற்பகல் 2:02 மணிக்கு சப்தமி திதி முடிந்து அஷ்டமி தொடங்குகிறது.
அஷ்டமி திதி ஆன்மிக சாதனைகளுக்கும், பிரார்த்தனை, தியானம் போன்ற உள்முக செயல்களுக்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இதனால் இந்து காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
அஷ்டமி தினமான இன்று ‘ஸ்ரவண’ நட்சத்திரம் நள்ளிரவு 11:24 வரை நீடிக்கிறது. இது பிரார்த்தனை, ஒருமுக சிந்தனைக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இதனால் பக்தர்கள் அமைதியாக, பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
அயோத்தி முழுவதும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷங்கள் எதிரொலிக்க, ராம நாம சங்கீர்த்தனங்களுடன் அஷ்டமி வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது.
நாகர கட்டடக்கலை பாணியில் எழுப்பப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவில், கிழக்கு-மேற்காக 380 அடி நீளமும், 250 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டது. 392 தூண்கள், 44 கதவுகளுடன் கூடிய இக்கோயிலின் சுவர்களிலும் தூண்களிலும் இந்து தெய்வங்களின் நுணுக்கமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கருவறையில் குழந்தை வடிவிலான ஸ்ரீ ராமலல்லா விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கிழக்கு முகப்பில் உள்ள ‘சிங்க துவார்’ வழியாக 32 படிகள் ஏறி பக்தர்கள் கோயிலுக்குள் செல்கின்றனர்.
கோயில் வளாகத்தில் நிருத்ய மண்டபம், ரங்க மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனா மண்டபம், கீர்த்தன மண்டபம் என ஐந்து மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டபமும் பஜனை, கீர்த்தனை, சொற்பொழிவு போன்ற ஆன்மிக நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
கோயில் வளாகத்தில் பழமையான ‘சீதா கூப்’ என்ற கிணறு உள்ளது. தென்மேற்கு பகுதியில் உள்ள குபேர் திலாவில் புராதன சிவன் கோயில் புனரமைக்கப்பட்டு, அருகே ஜடாயு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவை ராமாயண கால நினைவுகளை மீட்டெடுப்பதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
புத்தாண்டு, விழாக்காலங்களில் அதிக கூட்டம் வருவதால் கோயில் நிர்வாகம் தரிசன நேரத்தை காலை 6 மணி முதல் இரவு வரை நீட்டித்துள்ளது.
பகல் நேரங்களில் 2 முதல் 4 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b