Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 09 மே (ஹி.ச.)
தமிழகத்தில் மீன்களின் இனப் பெருக்கத்துக்காக விசைப்படகுகள் ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டுப் படகுகள் மட்டும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றன.
இந்த நிலையில், இன்று (மே 9) சனிக்கிழமை என்பதால் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் கரை திரும்பின. விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் இருக்கின்ற காரணத்தினால், நாட்டுப் படகு மீனவர்களின் வலையில் ஏராளமான மீன்கள் சிக்கின.
ஆகையால், இன்று ஏல கூடத்தில் மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. இதேபோல், பள்ளி விடுமுறை என்பதால் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திற்கு மீன்களை வாங்க பொதுமக்கள், மீன் வியாபாரிகளின் வரத்தும் அதிகரித்துக் காணப்பட்டது.
இதன் காரணமாக மீன்களின் விலை குறையாமல் உயர்ந்தே காணப்பட்டது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ. 1,300 முதல் ரூ. 1,500 வரையும், விள மீன், ஊழி, பாறை ஆகிய ரக மீன்கள் கிலோ ரூ. 500 முதல் ரூ. 700 வரையும் விற்பனையானது. மேலும், 70 கிலோ 80 கிலோ எடை கொண்ட கேரை மீன்கள் அதிக அளவு வந்ததால், கிலோ ரூ. 270 முதல் ரூ. 300 வரை விற்பனையானது.
மேலும், சாளை மீன் கூடை ரூ. 2,500 வரையும், நண்டு கிலோ ஒன்று ரூ. 700 வரையும் விற்பனையானது. மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில், பொதுமக்களும் விலையைப் பொருட்படுத்தாமல் மீன்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
கிழக்கு கடல் பகுதியில் வாழும் மீன்களின் இனப் பெருக்கத்தை முன்னிட்டு, மீன்பிடி தடைகாலம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 இல் தொடங்கிய இந்த தடைக்காலம் வரும் ஜூன் மாதம் 16 ஆம் தேதி வரை என 61 நாட்களுக்கு நீடிக்க உள்ளது. ஆகையால், தற்போது மாநிலத்தில் மீன்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், மீன்பிடி தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு உயிர் நாடியாக உள்ள உபகரணங்களான படகுகள், வலைகள் உள்ளிட்டவற்றை சீர் செய்யும் பணியில் களமிறங்கியுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN