கோடைமழை எதிரொலி - குற்றாலம் ஐந்தருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தென்காசி, 09 மே (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலத்தில், வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். தற்போது கோடை காலம் என்பதால் பெரும்பாலான அருவிகள் வறண்டு காணப்பட்டன.
Tourists Flock to Courtallam's Five Falls


தென்காசி, 09 மே (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலத்தில், வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

தற்போது கோடை காலம் என்பதால் பெரும்பாலான அருவிகள் வறண்டு காணப்பட்டன.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மாலை நேரத்தில் பெய்த தொடர் கோடை மழையினால், அருவிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் நீரோடைகள் புத்துயிர் பெற்றுள்ளன.

குறிப்பாக, ஐந்தருவியின் ஒரு கிளையில் மட்டுமே தண்ணீர் விழுந்து வந்த நிலையில், தற்போது நீர்வரத்து அதிகரித்து இரண்டு கிளைகளில் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் குவிந்து வருகின்றனர்.

பெண்கள் பகுதியில் தண்ணீர் விழாமல் வறண்டு காணப்பட்டதால், ஆண்கள் குளிக்கும் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பெண்களும் தனித்தனியாகக் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

பழைய குற்றாலம் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மெயின் அருவியில் பழைய பாதுகாப்பு வளைவுகள் அகற்றப்பட்டு, புதிய வளைவுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதால் அங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐந்தருவியில் மட்டுமே தண்ணீர் விழுவதால், குற்றாலத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் ஐந்தருவியை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் மழை நீடித்தால், இந்த மாத இறுதியிலேயே குற்றாலச் சீசன் முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b