மறு தேர்தலை சந்திப்பதன் மூலம் மட்டுமே நிலையான ஆட்சி தமிழ்நாட்டில் சாத்தியம் - தங்கர் பச்சான்
சென்னை, 09 மே (ஹி.ச.) 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பல நாட்கள் கடந்தும், புதிய அரசு எப்போது அமைவது என்பது இன்னும் உறுதி ஆகாத நிலை தொடர்கிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களம் இறங்க
Thankar bachan


சென்னை, 09 மே (ஹி.ச.)

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பல நாட்கள் கடந்தும், புதிய அரசு எப்போது அமைவது என்பது இன்னும் உறுதி ஆகாத நிலை தொடர்கிறது.

இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களம் இறங்கி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியை அமைக்க தேவையான முழு பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.

தமிழக சட்டசபையில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியை அமைக்க குறைந்தபட்சம் 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

அதனால் தவெக-வின் பலம் 107 ஆக குறைகிறது. இதனால் கூடுதல் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், முதலில் 5 எம்.எல்.ஏக்களை கொண்ட காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து தலா இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தன. இதன் மூலம் விஜய்க்கு ஆதரவாக உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தது.

பெரும்பான்மையை எட்ட இன்னும் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது.

இந்த இரண்டு உறுப்பினர்களை பெறுவதற்காக பல்வேறு கட்சிகளுடன் தவெக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிடம் மூன்று முறை நேரில் சந்தித்து ஆதரவு கோரப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்பதால், தவெகவுக்கு ஆதரவு வழங்க இயலாது என்று அந்தக் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.

இதனால் தற்போது அரசியல் வட்டாரங்களின் முழு கவனமும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது திரும்பியுள்ளது.

விசிக தலைவர் திருமாவளவன் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கட்சியின் சில நிர்வாகிகள் தவெகவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகினாலும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

விசிக தனது ஆதரவை வழங்கினால், விஜய் தலைமையிலான தவெக 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை எட்டும். அதன் பின்னர் ஆளுநர் அரசு அமைக்க அழைப்பு விடுக்கும் வாய்ப்பு உருவாகும். இதனால் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் பதவியேற்பாரா என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் இயக்குநரும் பாமக ஆதரவாளருமான தங்கர் பச்சான் தனது எக்ஸ் தளத்தில்,

தவெக ஆட்சி அமைக்கவும், திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்கவும் பெரும்பான்மை கிடைக்காமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன! இரண்டுமே சாத்தியப்படாத நிலை தான் தற்பொழுது நிலவுகிறது.

ஒருவேளை யார் குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளியை எப்படியாவது காப்பாற்ற செயற்கை காற்று மூலம் (வென்டிலேட்டர்) காப்பாற்றிக்கொள்ள போராடும் முயற்சி எப்படிப்பட்டதோ அதே நிலைதான் ஏற்படும்.

நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் எனக் கூறுகிறார்களே! அதன் பொருள் என்ன தெரியுமா? எந்த நொடி வேண்டுமானாலும் செயற்கை மூச்சு தருவதை பிடுங்கி கொள்வோம் என்பதுதான்! மறு தேர்தலை சந்திப்பதன் மூலம் மட்டுமே நிலையான ஆட்சி தமிழ்நாட்டில் சாத்தியம்.

மேற்சொன்ன நிலைக்குச் சென்று அவசர சிகிச்சை நோயாளியாக இருந்து கொண்டு தான் விஜய் ஆட்சி அமைக்க விரும்புகிறாரா? என்று பதிவிட்டு உள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN