தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் - சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி வலியுறுத்தல்
மதுரை, 09 மே (ஹி.ச.) மதுரை நரிமேடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மார்க்சிய ஆசான் தோழர் எஸ்.ஏ. பெருமாள் நூல் வெளியீட்டு விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கலந்துகொண்டு நூலை வெளியிட்டார்.
பேபி


மதுரை, 09 மே (ஹி.ச.)

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மார்க்சிய ஆசான் தோழர் எஸ்.ஏ. பெருமாள் நூல் வெளியீட்டு விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கலந்துகொண்டு நூலை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய எம்.ஏ. பேபி,

தமிழ்நாட்டில் தற்போது முக்கியமான அரசியல் சூழல் நிலவி வருவதாக குறிப்பிட்டார். நாடு முழுவதும் மதவாத சக்திகள் மக்களை மத அடிப்படையில் பிரிக்க முயற்சி செய்து வருவதாகவும், தமிழகத்திலும் அதற்கான முயற்சிகள் நடைபெற்றாலும், மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் அதை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

திருப்பரங்குன்றம் சம்பவத்தை எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட அவர், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அமைப்புகள் அயோத்தி பாபர் மசூதி பிரச்சினையைப் போல கலவர சூழல் உருவாக்க முயன்றதாகவும், திமுக அரசின் தலையீடு மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், கீழடி அகழாய்வு உள்ளிட்ட வரலாற்று ஆய்வுகளை ஒன்றிய அரசு தடுக்க முயன்றதாக குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக அரசியலை தடுக்க ஜனநாயக கட்சிகள் தொடர்ந்து போராடி வருவதாக கூறினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய அவர், திமுக கூட்டணி மற்றும் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வியடைந்த நிலையில், புதிதாக உருவான தமிழக வெற்றிக் கழகம் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று, பெரும்பான்மைக்கு 11 இடங்கள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டப்படி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்.

இதேபோன்ற சூழலில் வாஜ்பாயை குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைத்தது போல, தற்போது தமிழகத்திலும் அதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தமிழக பொறுப்பு ஆளுநர் ஒன்றிய அரசின் அழுத்தத்தில் செயல்படுகிறார் என்றும், ஆட்சி அமைப்பதில் காலதாமதம் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் எம்.ஏ. பேபி குற்றம்சாட்டினார்.

மேலும், “தவெக ஆட்சி அமைக்க அனுமதி மறுக்கப்பட்டால் அது அரசியலமைப்புக்கு எதிரான பெரிய தவறாக மாறிவிடும். தமிழகத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது” என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பாஜக அதிமுகவை பின்வாசல் வழியாக ஆட்சிக்கு கொண்டு வர முயற்சி செய்கிறது.

தற்போது விஜயை தவிர தமிழகத்தில் வேறு யாருக்கும் பெரும்பான்மை இல்லை. மக்களின் தீர்ப்பை மதிக்கும் வகையில் தான் நாங்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

விஜய் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக உள்ளார். மதச்சார்பற்ற ஆட்சி அமைப்பதாக அவர் எங்களிடம் தெரிவித்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணியில் இருப்பதால் அவர்களை ஏற்க முடியாது.

திமுகவுடன் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்றும், கூட்டணி சுமூகமாக தொடர்கிறது என்றும் எம்.ஏ. பேபி தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P