Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 01 ஜூன் (ஹி.ச.)
அரபிக்கடலில் மீன்பிடி தடைக்காலம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் அரபிக்கடல் பகுதியில் ஆண்டுதோறும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் இன்று (ஜூன் 01) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
மீன்களின் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில் கொண்டு, மீன் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு விதித்துள்ள இந்த தடை, அடுத்த 60 நாட்களுக்கு அமலில் இருக்கும்.
இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் சின்னமுட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் உள்ளிட்ட முக்கிய மீன்பிடி துறைமுகங்களில் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தடைக்காலம் அமலுக்கு வந்ததால், ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் தற்காலிகமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
தடைக்காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம், நாட்டுப் படகுகள் மூலம் கரையோரப் பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதி உண்டு என்று தெரிவித்தனர்.
தடைக்காலத்தில் பாதிக்கப்படும் மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இதற்கான பணிகளில் மீன்வளத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்கள் பலர் இந்த காலகட்டத்தை படகுகள் மற்றும் வலைகளை சீரமைக்கும் பணிக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b