Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூன் (ஹி.ச.)
கூடைப்பந்து சங்கத் தலைவராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடரலாமா? – அதிமுக எம்.பி. இன்பதுரை கேள்வி எழுப்பி உள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக நீடிப்பது நலன் முரண்பாடு (Conflict of Interest) தொடர்பான கடுமையான கேள்விகளை எழுப்புவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் (X) வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
2015-ஆம் ஆண்டு 'BCCI vs Cricket Association of Bihar' வழக்கில் உச்சநீதிமன்றம் அமைத்த நீதிபதி ஆர்.எம். லோதா குழுவின் முக்கிய பரிந்துரைகளில் ஒன்று, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் விளையாட்டுச் சங்கங்களில் பதவி வகிக்கக் கூடாது என்பதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நலன் முரண்பாட்டை தவிர்க்கும் நோக்கில் வழங்கப்பட்ட அந்த பரிந்துரைகளில் பலவற்றை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து எந்த விதிகளும் இல்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ள இன்பதுரை, லோதா குழுவின் பரிந்துரைகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாட்டை தமிழக அரசு அதிகாரிகள் அமைச்சருக்கு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் விளையாட்டு வளர்ச்சியில் அதிமுக ஆட்சியின் பங்களிப்பையும் தனது பதிவில் அவர் எடுத்துரைத்துள்ளார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) 1992-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டதாகவும், 1995 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக நேரு விளையாட்டரங்கம், நேரு உள்விளையாட்டு அரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம் மற்றும் வேளச்சேரி நீச்சல் வளாகம் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு 2018-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நினைவில் கொள்ள வேண்டும் என இன்பதுரை தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறையை அரசியலாக்காமல், நலன் முரண்பாடு குறித்த எழுந்துள்ள கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ