1800 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை,கல்வித்துறையின் அவலநிலையை மாற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு, 01 ஜூன் (H.S.) தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 1800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாதது கவலைக்குரிய நிலை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி


தமிழ்நாடு, 01 ஜூன் (H.S.)

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 1800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாதது கவலைக்குரிய நிலை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமின்றி, 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களும் காலியாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்விக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டிய பள்ளிக்கல்வித் துறை இவ்வளவு பலவீனமாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர்கள் நியமனம், கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மனிதவள வளர்ச்சி தொடர்பாக போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மே 31-ஆம் தேதி மட்டும் 30 பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 14 மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் 3 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தற்போது உயர்நிலைப் பள்ளிகளில் 700, மேல்நிலைப் பள்ளிகளில் 300, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 800 என மொத்தம் 1800 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 1000 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை பாதிக்கும் என்றும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தயாரிப்பில் இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பல பள்ளிகளில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி நியமனங்களை தாமதப்படுத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளுக்கு அரசு அல்லது ஆளுங்கட்சியுடன் தொடர்புடைய தரப்பினரே காரணம் எனவும், இதன் விளைவாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வந்து, அனைத்து அரசு பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்களை நியமிக்கவும், அனைத்து கல்வி மாவட்டங்களுக்கும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் அனைத்து வருவாய் மாவட்டங்களுக்கும் முதன்மைக் கல்வி அதிகாரிகளை நியமிக்கவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P