ஆத்தூரில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல் - பேருந்து சேவையை நிறுத்த எச்சரிக்கை
சேலம், 01 ஜூன் (ஹி.ச.) சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து சேலம், ராசிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்
பேருந்து


சேலம், 01 ஜூன் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து சேலம், ராசிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் தனியார் பேருந்து சேவையை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக பேருந்து தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்தூரில் இருந்து நெய்வேலி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர் வெங்கடேஷ் மற்றும் நடத்துனர் சூர்யா ஆகியோரை, வி.அலம்பலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதையடுத்து ஆத்தூரில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் செய்தியாளர்களை சந்தித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,

பேருந்து நிறுத்தம் இல்லாத பகுதிகளிலும் பயணிகளை ஏற்றவும் இறக்கவும் வலியுறுத்தி சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அச்சத்தில் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தனியார் பேருந்து பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால், ஆத்தூரில் இருந்து இயக்கப்படும் அனைத்து தனியார் பேருந்துகளையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை

விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam