Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 01 ஜூன் (ஹி.ச.)
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றி கழக தலைவருமான ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று திருச்சிக்கு வருகை தருகிறார். இதையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும் திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விட மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
தனக்கு வாக்களித்து பெருவாரியான வெற்றியை தேடித்தந்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து இன்று மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சி வந்தடையும் முதலமைச்சர் விஜய், விமான நிலையத்திலிருந்து திறந்த வாகனத்தில் சுமார் 13 கிலோமீட்டர் தூரம் சாலை வழியாக பயணித்து மக்களை சந்திக்கிறார்.
விமான நிலையம், புதுக்கோட்டை சாலை, சுப்பிரமணியபுரம், டிவிஎஸ் சோதனைச்சாவடி, பழைய பால்பண்ணை, சத்திரம் பேருந்து நிலையம் வழியாக புனித ஜோசப் கல்லூரி மைதானத்தை அவர் சென்றடைகிறார்.
புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் மாலை 4.15 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றுகிறார்.
கூட்டத்திற்கு க்யூ.ஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதி சீட்டு பெற்ற 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி கர்ப்பிணிகள், சிறுவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு இன்று காலை 10 மணி முதல் திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய பேருந்து நிலையம், திருவெறும்பூரிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் மாநகரப் பேருந்துகள் மரக்கடை, மெயின்கார்டு கேட் வழியாக திருப்பி விடப்படுகின்றன. விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு முதலமைச்சர் இன்று இரவே தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
Hindusthan Samachar / vidya.b