Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 01 ஜூன் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோமேஸ்வரபுரம், வீரமாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இரவு திடீரென வீசிய பலத்த சூறைக்காற்றால், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைத் தோட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
திடீரென வீசிய சூறைக்காற்றின் தாக்கத்தால் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தும், தண்டுகள் முறிந்தும் விழுந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்களும் சேதமடைந்ததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த பாதிப்பால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வாழை சாகுபடிக்காக கடன் பெற்று முதலீடு செய்திருந்த நிலையில், எதிர்பாராத சூறைக்காற்றால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
சேதமடைந்த பகுதிகளை வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பாதிப்பு விவரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூறைக்காற்றால் ஒரே இரவில் வாழைத் தோட்டங்கள் நாசமான சம்பவம் கும்பகோணம் சுற்றுவட்டார விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN