Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூன் (ஹி.ச.)
சென்னை ராமாபுரத்தில் தனியார் கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த 35 வடமாநில தொழிலாளர்களுக்கும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ராமாபுரத்தில் உள்ள எல்&டி பி&எஃப் இன்னோவேஷன் கேம்பஸ் கட்டுமானத் தளத்தில், தொழிலாளர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடியிருப்பின் இரும்பு மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு தங்கியிருந்த 35 வடமாநில தொழிலாளர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியானது.
இந்த சம்பவம் சென்னை மெட்ரோ ரயில் பணிகளுடன் தொடர்புடையதாக சில இடங்களில் தகவல்கள் பரவிய நிலையில், அதனை மறுத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
ராமாபுரத்தில் நடைபெற்ற இந்த துரதிர்ஷ்டவசமான விபத்திற்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கும் அல்லது மெட்ரோ ரயில் தொழிலாளர் குடியிருப்புகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்பு, எல்&டி பி&எஃப் இன்னோவேஷன் கேம்பஸ் கட்டுமானத் திட்டத்திற்குச் சொந்தமானது என்றும், மெட்ரோ ரயில் திட்டத்துடன் சம்பந்தப்படாத தனியார் கட்டுமான நிறுவன வளாகத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், விபத்து தொடர்பாக தவறான தகவல்கள் பரவுவதைத் தவிர்க்கவும், உண்மை நிலையை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும் இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக சிஎம்ஆர்எல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam