சென்னை ராமாபுரம் எல்&டி தொழிலாளர்கள் தங்கியிருந்த இரும்பு ஷெட் இடிந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு
சென்னை, 01 ஜூன் (ஹி.ச.) சென்னை ராமாபுரம் சாந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள எல்&டி நிறுவனத்தின் வடமாநில கட்டுமான தொழிலாளர்கள் தங்கியிருந்த இரும்பு ஷெட்டில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நந்தம்பாக்கம் காவல
பலி


சென்னை, 01 ஜூன் (ஹி.ச.)

சென்னை ராமாபுரம் சாந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள எல்&டி நிறுவனத்தின் வடமாநில கட்டுமான தொழிலாளர்கள் தங்கியிருந்த இரும்பு ஷெட்டில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமாபுரம் சாந்தி நகர் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்குவதற்காக இரும்பு ஷெட் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று (மே 31) நள்ளிரவு சுமார் 12 மணியளவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட்டின் நடைபாதை படிக்கட்டு போர்டிகோ பகுதி திடீரென உடைந்து விழுந்தது.

இந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், 10 பேர் தொடர்ந்து ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரிஞ்சி மாஞ்சி (35) என்பவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரும்பு ஷெட்டின் கட்டுமானத் தரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலாளர்கள் தங்கியிருந்த இடத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பதும் விசாரணையின் ஒரு பகுதியாக உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam