Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூன் (ஹி.ச.)
சென்னை கோயம்பேடு பகுதியில் இளம் இலங்கைத் தமிழ்ப் பெண் யான்சி (18) கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தனியார் மதுக்கூடத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது சட்டத்தின் ஆட்சிக்கே விடுக்கப்பட்ட சவால் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தனியார் மதுக்கூடங்களில் நடைபெறும் களியாட்ட கலாச்சாரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும், அரசின் உரிய அனுமதியின்றி செயல்படும் மதுக்கூடங்களை உடனடியாக மூட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்பை பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உறுதி செய்ய வேண்டும் என்றும், காவல்துறை மற்றும் உளவுத்துறையின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மது மற்றும் போதைப் பழக்கம், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு சமூக மற்றும் பொருளாதார காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, மனஅழுத்தம், போதிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் இல்லாமை போன்றவை இளைஞர்களை தவறான பாதைக்கு தள்ளுவதாக தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்வி, கலை, இலக்கியம் மற்றும் திரைப்படங்கள் வாயிலாக முற்போக்கான பண்பாட்டு மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளது.
வன்முறை கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ