Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 01 ஜூன் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக தொண்டர் மகேந்திரன் திடீரென உயிரிழந்த சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த தொண்டர் அதிமுக தொண்டர் மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த தொண்டர் மகேந்திரன், தான் உயிரிழந்தால் தனது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டும் என முகநூல் பதிவு ஒன்றில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த பதிவு கட்சித் தொண்டர்கள் மத்தியில் பரவி கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், மகேந்திரன் மறைவடைந்தார்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வி மற்றும் அதனைத் தொடர்ந்து கட்சியில் ஏற்பட்ட பிளவு ஆகியவற்றால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே மகேந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தை மிகவும் துயரமானது என கவலை தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, மகேந்திரனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கட்சித் தொண்டனின் இழப்புக்கு வருத்தம் தெரிவித்த அவர், மகேந்திரன் குடும்பத்தினரிடம் மன்னிப்பும் கோரினார்.
மேலும், மறைந்த மகேந்திரனின் பிள்ளைகளின் கல்வி செலவு முழுவதையும் அதிமுகவே ஏற்றுக்கொள்ளும் எனவும், குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் கட்சி செய்யும் எனவும் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.
தொண்டரின் மறைவுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b