பயிர் கடன் முழு தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டம்
வேலூர், 01 ஜூன் (ஹி.ச.) தேர்தலுக்கு முன்பு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் தற்போது அரசு அமைந்த பிறகு, குறு மற்றும் சிறு விவசாய
Farmers protest demanding complete waiver of crop loans


வேலூர், 01 ஜூன் (ஹி.ச.)

தேர்தலுக்கு முன்பு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் தற்போது அரசு அமைந்த பிறகு, குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கான பகுதி கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறு விவசாயிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.50,000 வரையும், சிறு விவசாயிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரையும் கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் திருப்தியடையாத விவசாய சங்கங்கள், அனைத்து விவசாயிகளுக்கும் எந்த பாகுபாடும் இன்றி முழு பயிர் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

அந்த வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இன்று தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

வேலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் இந்த ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்றது.

விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை உணர்த்தும் வகையில் நெற்றியில் பட்டை நாமம் இட்டும், வாயில் கருப்புத் துணி கட்டியும் போராட்டக் களத்தில் பங்கேற்றனர்.

சேலத்தில் கோட்டை மைதானம் அருகே திரண்ட விவசாயிகள் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி கடன் தள்ளுபடி கோரி முழக்கமிட்டனர்.

தொடர் வறட்சி, பருவமழை பொய்ப்பு மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள கடன் சுமையில் இருந்து மீள முடியாமல் தவிப்பதாகவும், அதனால் முழுமையான கடன் தள்ளுபடியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கிடையில், திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கச் சென்ற விவசாயிகள் குழுவை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாநிலம் முழுவதும் விவசாயிகள் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த போராட்டம் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b