பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - காவல் ஆய்வாளர் திலீபன் பணியிடை நீக்கம்
தூத்துக்குடி, 01 ஜூன் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் திலீபன், பெண் காவலருக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் ச
Arumuganeri Police Station


தூத்துக்குடி, 01 ஜூன் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் திலீபன், பெண் காவலருக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் திலீபன் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் ஆதாரமற்றது என்றும், தன்னை குறிவைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் கூறி காவல் ஆய்வாளர் திலீபன் சமூக வலைதளத்தில் விளக்கமளித்திருந்தார்.

மேலும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது என்பது நிரூபிக்கப்படும் வரை வேறு எந்தப் பணியிலும் சேர மாட்டேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புகார் தொடர்பான முதற்கட்ட விசாரணை நடைபெற்று வரும் சூழலில், காவல் துறை நிர்வாகம் திலீபனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

விசாரணை நிறைவடையும் வரை அவர் பணியில் இருந்து விலக்கி வைக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் தொல்லை புகார் தொடர்பாக காவல் துறையினரே விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN