Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 01 ஜூன் (ஹி.ச.)
நாட்டின் பல பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவையற்ற வெளிப்புற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடும் வெயிலில் நீண்ட நேரம் உடற்பயிற்சி அல்லது கடினமான உடல் உழைப்பில் ஈடுபட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலில் செருப்பு அணியாமல் வெளியே செல்லக் கூடாது எனவும், மது, தேநீர், காபி, குளிர்பானங்கள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
வீடுகளில் அதிக வெப்பம் காணப்படும் நேரங்களில் சமையலை குறைத்து, கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல், அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள் மற்றும் பழைய உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை நிறுத்தப்பட்ட வாகனங்களுக்குள் தனியாக விடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடல் வெப்பநிலை அதிகரிப்பு, மயக்கம், குழப்பமான நிலை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக 108 அல்லது 102 அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு மருத்துவ உதவி பெற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் இந்த வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P