Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 01 ஜூன் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென சுற்றிச் சுழன்ற சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ததால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்து விவசாயிகள் கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
பாபநாசம் தாலுக்காவுக்கு உட்பட்ட கணபதி அக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர், இலுப்பக்கோரை, மாகாளிபுரம், தேவன்குடி, சோமேஸ்வரபுரம், வீரமாங்குடி, ஈச்சங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை திடீரென வீசிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், தாருடன் இருந்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தன. இதனால் பிஞ்சு தருவாயில் இருந்த வாழைக்காய்கள் மற்றும் வாழை இலைகளும் பெருமளவில் நாசமடைந்துள்ளன.
சாதாரணமாக சந்தையில் ரூ.600 வரை விற்பனை செய்யப்படும் வாழைத்தார்கள், சூறைக்காற்றால் கீழே விழுந்ததால் விலை சரிவை சந்திக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் சேதமடைந்த வாழைத்தார்களை வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய பாதிப்பால் வாழைத்தார்களும், வாழை இலைகளும் முழுமையாக சேதமடைந்துள்ளதால் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை அரசு தரப்பில் போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P