Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை
(TNEA 2026) விண்ணப்பப் பதிவு செய்ய வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மாணவர்களின் நலன் கருதி ஜூன் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கிய பொறியியல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு, முதலில் ஜூன் 2-ஆம் தேதி நிறைவடைய இருந்தது. இந்நிலையில், இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் பயன்பெறும் வகையில் கால அவகாசம் மேலும் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மே 28-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 2,69,953 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில் 1,10,837 மாணவர்களும், 91,166 மாணவிகளும் அடங்குவர். மேலும், 2,02,003 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.
விண்ணப்பப் பதிவு செய்த மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் பிற சான்றிதழ்களை ஜூன் 6-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான சம வாய்ப்பு எண்
(Random Number) ஜூன் 10-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்.
B.Arch படிப்புகளுக்கான NATA நுழைவுத் தேர்வு ஜூன் மாத இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளதால், அந்தப் படிப்பிற்கான விண்ணப்பப் பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் ஜூன் 20-ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், TNEA துணைக் கலந்தாய்வுக்கான (Supplementary Counselling) விண்ணப்பப் பதிவு தேதிகள் தனியாக அறிவிக்கப்படும்.
விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விளையாட்டு சாதனைச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை நடைபெறுகிறது. இதற்கான கால அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், குறுந்தகவல் மூலமும் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 110 TFC சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் theacare@gmail.com மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
இதனிடையே, 2026-27 கல்வியாண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கை விண்ணப்பங்களும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலுள்ள 55 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு, நேரடி இரண்டாமாண்டு மற்றும் பகுதிநேர பட்டயப்படிப்புகளுக்கு www.tnpoly.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
மே 30-ஆம் தேதி வரை 18,888 மாணவர்கள் முதலாமாண்டு பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
மேலும், முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் ஜூன் 30-ஆம் தேதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ