குஜராத்தை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் ஆனது பெங்களூரு அணி..!
அகமதாபாத் , 01 ஜூன் (ஹி.ச.) 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரி
A


அகமதாபாத் , 01 ஜூன் (ஹி.ச.)

19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு நடைபெற்றது.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்ஷன் மற்றும் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர். 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் ஆட்டமிழந்தார்.

சாய் சுதர்ஷன் 12 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து நிஷாந்த் சிந்து (20), ஜோஸ் பட்லர் (19), அர்ஷத் கான் (15), ராகுல் திவாடியா (7) ஆகியோர் நிலைத்து நிற்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு தரப்பில் ரஷிக் சலாம் தர் 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளும், குர்னால் பாண்டியா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சிறப்பான தொடக்கம் அளித்தனர். இருவரும் அதிரடியாக ரன்கள் குவித்தனர். வெங்கடேஷ் ஐயர் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கல் (1), ரஜத் படிதார் (15), குர்னால் பாண்டியா (1) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

எனினும் மறுமுனையில் நிலைத்து நின்ற விராட் கோலி பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார்.

அவர் 75 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

பெங்களூரு அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

மேலும் அந்த அணி 2-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA