Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 01 ஜூன் (ஹி.ச.)
திருச்சி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற பெண்ணான கஜலட்சுமி (28) என்பவர் தனது 6 மாதப் பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத தனது குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் அண்மையில் இவர் சேர்த்தபோது, இவருக்கு அறிமுகமான செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுஜாதா (35) என்பவர் கஜலட்சுமிக்கு உணவு வாங்கித் தருவது உள்ளிட்ட உதவிகளைச் செய்து நெருக்கமானார்.
இந்நிலையில் கஜலட்சுமிக்கு யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்ட சுஜாதா உன்னையும், குழந்தையையும் நான் பார்த்துக்கொள்கிறேன் எனவும், இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு மே 30 ஆம் தேதி மாலை அவர்களை அழைத்துச் சென்றார்.
அங்கு கஜலட்சுமி தனது குழந்தையை சுஜாதாவிடம் கொடுத்துவிட்டு கழிப்பறைக்குச் சென்று திரும்பியபோது சுஜாதா குழந்தையுடன் மாயமாகியிருந்தார். உதவுவதுபோல நடித்து குழந்தையை அவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் கஜலட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்தனர். மேலும், தனிப்படையும் அமைக்கப்பட்டு குழந்தையைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை தனிப்படை போலீஸார் மயிலாடுதுறையில் நேற்று
(மே 31) மீட்டனர்.
மேலும், அந்தக் குழந்தையை வாங்க முயன்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த தம்பதியான செல்வராஜ் (34), ஜெயந்தி (32). குழந்தையைக் கடத்திய சுஜாதா, கடத்தலுக்கு உதவிய மயிலாடுதுறையைச் சேர்ந்த லோகநாதன் (35) ராஜராஜன் (37) ஆகிய 5 பேரை கைது செய்ததாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
குழந்தையை பத்திரமாக மீட்ட போலீசார் தற்போது திருச்சிக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மீட்கப்பட்ட குழந்தை விரைவில் தாய் கஜலட்சுமியிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்டவர்களிடம் கடத்தலுக்கான நோக்கம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த குழந்தை கடத்தல் சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், 48 மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்ட போலீசாரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b