Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூன் (ஹி.ச.)
சென்னை கோயம்பேடு பகுதியில் இளம் பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் FL-3 மதுபான பாரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அந்த பார் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் FL-3 பாரில் நடனமாடியபோது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பினரும் பாரின் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.
அதன்பின், ஒரு தரப்பைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிலர் காரில் பின்தொடர்ந்து வந்து அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொரு பெண் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி (KMC) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக கோயம்பேடு K-11 சிஎம்பிடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையரின் உத்தரவின்பேரில் துணை ஆணையர் (ஆயத்தீர்வை) விசாரணை மேற்கொண்டார்.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு, சம்பவத்துடன் தொடர்புடைய FL-3 பாரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதுடன், அந்த பார் சீல் வைக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ