Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 01 ஜூன் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி அருகே நிலப்பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் தாக்கப்பட்டதுடன், மயங்கி விழுந்த பின்னரும் தாக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த திருவண்ணாமலை சாலையில் உள்ள வேட்டியம்பட்டி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவருக்கும், அவரது உறவினரான சூளகிரி அருகே மாரண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாளாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
வேட்டியம்பட்டி ஏரிக்கரை பகுதியில் உள்ள நிலத்திற்கு மல்லிகா அடிக்கடி வருவதையடுத்து, சந்திரசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பலமுறை தகராறு ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று மல்லிகாவிற்கு சொந்தமான மல்லிப்பூ தோட்டத்திற்கு அவர் சென்றபோது, அங்கு வந்த சந்திரசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மல்லிகாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், மல்லிகாவை சந்திரசேகரன் தாக்கியதாகவும், குடும்பத்தினர் சிலர் அவரை கீழே தள்ளியதாகவும் கூறப்படுகிறது.
இதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்த மல்லிகாவை, அங்கிருந்த சில பெண்கள் காலால் எட்டி உதைத்தும், கைகளால் தாக்கியும் “நடிக்கிறாயா?” என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தாக்குதலில் காயமடைந்த மல்லிகா, 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P