Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 01 ஜூன் (ஹி.ச.)
பெங்களூரு நோக்கி உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
திடீரென தாறுமாறாக ஓடிய லாரி, சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் பலமாக மோதி கவிழ்ந்தது.
மோதிய வேகத்தில் லாரியில் இருந்த உருளைக்கிழங்கு மூட்டைகள் சாலை முழுவதும் சிதறி விழுந்தன.
இந்த விபத்து சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்ததால், அப்பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்த விபத்தால் சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிருஷ்ணகிரி போக்குவரத்து காவல்துறையினர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
கிரேன் உதவியுடன் கவிழ்ந்த லாரி அப்புறப்படுத்தப்பட்டு, சாலையில் சிதறிக்கிடந்த உருளைக்கிழங்குகள் அகற்றப்பட்டன.
சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிவேகம் அல்லது தூக்க கலக்கம் காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b