அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் நள்ளிரவில் திடீர் ஆய்வு
தூத்துக்குடி, 01 ஜூன் (ஹி.ச) தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் அம்மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் நள்ளிரவில் அதிரடியாக திடீர் ஆய்வு மேற்கொண்டார். நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வந்
Minister Srinath Conducts Surprise Midnight Inspection at Government Hospital


தூத்துக்குடி, 01 ஜூன் (ஹி.ச)

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் அம்மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் நள்ளிரவில் அதிரடியாக திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் ஸ்ரீநாத், அங்குள்ள பல்வேறு வார்டுகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு நள்ளிரவுப் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரிடமும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், மருந்து மாத்திரைகளின் இருப்பு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

மேலும், நோயாளிகளின் தற்போதைய உடல்நிலை குறித்த மருத்துவக் குறிப்புகளையும் விரிவாக ஆய்வு செய்தார்.

வார்டுகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், மருத்துவமனையில் ஏதேனும் குறைகள் இருக்கிறதா, சிகிச்சைகள் தடையின்றி கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார்.

மேலும், நோயாளிகளிடம் பேசிய அமைச்சர், தங்களுக்கு ஏதேனும் குறைகள் அல்லது மருத்துவத் தேவைகள் இருந்தால் தன்னிடம் எப்பொழுது வேண்டுமானாலும் நேரடியாகத் தெரிவிக்கலாம் என்று கூறி, அங்கு இன்னும் என்னென்ன கூடுதல் வசதிகள் செய்திட வேண்டும் என்பதையும் விரிவாகக் கேட்டறிந்தார்.

பொதுமக்கள் அளித்த கோரிக்கைகளின்படி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் வசதிகளை மேம்படுத்த உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஸ்ரீநாத் உறுதியளித்தார்.

நள்ளிரவில் அமைச்சர் நடத்திய இந்த அதிரடி ஆய்வு மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / vidya.b