Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூன் (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தித்துறை, மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், நீதித்துறை நியமனங்கள், மேகதாது அணை விவகாரம் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் விலகல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர்,
முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முழுமையாக தகுதி (மெரிட்) அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி எந்தவித பாகுபாடும் இன்றி நியமனங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் உயர்ந்த பதவிகளை பெற பணம் கொடுத்து நியமனங்கள் நடைபெற்றதாக குற்றம்சாட்டிய அவர், தற்போதைய ஆட்சியில் அத்தகைய முறைகேடுகளுக்கு இடமில்லை என்றும், ஒரு மாதத்திற்குள் அனைத்து நியமனங்களும் நிறைவுபெறும் என்றும் கூறினார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, கர்நாடக அரசு எந்த முயற்சி எடுத்தாலும் தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக அதனை தடுக்கும் என உறுதிபட தெரிவித்தார். இதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும், முதலமைச்சர் விஜய் நேரடியாக இந்த விவகாரத்தை கவனித்து வருவதாகவும் கூறினார்.
அதிமுகவினர் ஆளுநரிடம் தவெக குதிரை பேரம் நடத்தியதாக புகார் அளித்தது குறித்து பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததே அதிமுகவில் பிளவுக்கு காரணம் என குற்றம்சாட்டினார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தின்பேரில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெக பக்கம் வந்துள்ளதாகவும், இதில் எந்தவித குதிரை பேரமும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பெரும்பான்மை ஆதரவை ஏற்கனவே ஆளுநரிடம் நிரூபித்துள்ள நிலையில், பேரம் பேச வேண்டிய அவசியமே இல்லை என்றும் கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தில் அதிமுக நீதிமன்றத்தை நாடினால், அதனை சட்டரீதியாக எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ