Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூன் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் யான்சி (வயது 18).
இவர் இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், தனது தோழியைப் பார்ப்பதற்காக யான்சி மே 30 ஆம் தேதி சென்னை வந்துள்ளார்.
சென்னை வந்த யான்சி அவரது நண்பர்களைச் சந்தித்துவிட்டு அவர்களுடன் நேற்று முன் தினம்(மே 30) இரவு கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான விடுதி ஒன்றுக்கு சென்ற அவர் அங்கு நடனம் ஆடிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது இவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில், இருதரப்பினரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் மதுபான விடுதியில் இருந்த பவுன்சர்கள் இருதரப்பினரையும் வெளியே அனுப்பியுள்ளனர்.
சாலையிலும் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டுள்ளனர். இதையடுத்து ஒருதரப்பினர் காரிலும், மற்றொரு தரப்பினரான யான்சி மற்றும் அவரது நண்பர்கள் மூன்று இருசக்கர வாகனங்களிலும் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், காரில் சென்றவர்கள் முன்னாள் சென்றுக் கொண்டிருந்த யான்சியின் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியுள்ளனர். இதில் யான்சி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே இருசக்கர வாகனத்தில் சென்ற மற்றொரு சிறுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். எனினும், அவர் சுயநினைவை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஏற்கனவே பாலகுரு, கிஷோர் குமார், சுமன், விமல், மோகனசுந்தரம், ராகுல் ஆகிய ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இந்த கொலை சம்பவத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜோஷுவாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஜோஷுவாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தகராறு நடந்ததாக கூறும் மதுபான பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது
பாரில் நடந்த சாதாரண தகராறு கொலையில் முடிந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b