கோத்தகிரியில் அரசு பேருந்து ஊழியர்கள் திடீர் போராட்டம்..!
நீலகிரி, 01 ஜூன் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பணிமனையைச் சேர்ந்த தொழிலாளர்கள் திங்கள்கிழமை காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. கோத்தகிரி அரசு போக்குவர
H


நீலகிரி, 01 ஜூன் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பணிமனையைச் சேர்ந்த தொழிலாளர்கள் திங்கள்கிழமை காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பேருந்து சேவை பாதிக்கப்பட்டது.

கோத்தகிரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தினசரி 50-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொது மேலாளர் மற்றும் கிளை மேலாளரின் செயல்பாடுகளை கண்டித்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் பணிமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 5.30 மணி முதல் பணிமனையில் இருந்து இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் இயக்கப்படாததால், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால் பணிமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சீர்செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டம் காரணமாக கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam