பெண்ணின் உயிர் மலிவல்ல, நீதியே பதிலாக வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை, 01 ஜூன் (ஹி.ச.) சென்னையில் இலங்கை தமிழ் இளம் பெண் படுகொலை வழக்கு குறித்து கவலை தெரிவித்துள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இனி இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் தொடராமல் இருக்க இளைஞர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று
பெண்ணின் உயிர் மலிவல்ல; நீதியே பதிலாக வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்


சென்னை, 01 ஜூன் (ஹி.ச.)

சென்னையில் இலங்கை தமிழ் இளம் பெண் படுகொலை வழக்கு குறித்து கவலை தெரிவித்துள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இனி இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் தொடராமல் இருக்க இளைஞர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, 18 வயதுடைய இளம் பெண் யான்சி கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழர் எனக் கூறப்படும் யான்சி, தனது நண்பர்களுடன் பாருக்கு சென்றிருந்த நிலையில், அங்கு இருந்த மற்றொரு குழுவினருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் வன்முறையாக மாறி இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பெண்ணை கார் ஏற்றி கொலை செய்வது மனித நேயமற்ற மற்றும் கடுமையாகக் கண்டிக்கத்தக்க குற்றச் செயலாகும்.

பெண்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகும் வகையில் நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் சமூகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. பெண்கள் மீதான வன்முறைகளையும், ஆணாதிக்க மனப் பான்மையையும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெண்ணின் உயிர் மலிவல்ல; நீதியே பதிலாக வேண்டும். இளைஞர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சமூகத்திற்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டும். சமூகமே தலைகுனியும் வகையிலான செயல்களில் ஈடுபடக் கூடாது. இனி இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் தொடராமல் இருக்க இளைஞர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

அவர்களை நல்வழிப் படுத்தும் பெற்றோர்களுக்கும், பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்க வேண்டிய அரசுக்கும் சமமான பொறுப்பு உள்ளது. அனைவரும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால்தான் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும்

என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b