பூரி ஜகந்நாதர் கோயிலில் ஸ்நான பூர்ணிமா மற்றும் ரத யாத்திரை விழாக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
பூரி, 01 ஜூன் (ஹி.ச.) மகாவிஷ்ணுவின் அவதாரமான ஜகந்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதர் கோயில், இந்தியாவின் முக்கிய புண்ணியத் தலங்களில் ஒன்றாகவும், போற்றப்படும் இந்து ஆலயமாகவும் விளங்குகிறது. 12-ஆம் நூற்றாண்டி
பூரி ஜகந்நாதர் கோயிலில்  ஸ்நான பூர்ணிமா மற்றும் ரத யாத்திரை விழாக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்


பூரி, 01 ஜூன் (ஹி.ச.)

மகாவிஷ்ணுவின் அவதாரமான ஜகந்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதர் கோயில், இந்தியாவின் முக்கிய புண்ணியத் தலங்களில் ஒன்றாகவும், போற்றப்படும் இந்து ஆலயமாகவும் விளங்குகிறது.

12-ஆம் நூற்றாண்டில் மன்னர் அனந்தவர்மன் சோடகங்க தேவரால் கட்டப்பட்ட இக்கோயில், கலிங்க கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

பூரியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜகந்நாத ரத யாத்திரை திருவிழாவில், ஜகந்நாதர், பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவி ஆகிய மூன்று தெய்வங்களும் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்களில் கோயிலில் இருந்து குண்டிசா கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர்.

குண்டிசா கோயில் தெய்வங்களின் அத்தை வீடாகக் கருதப்படுகிறது. தேர்த் திருவிழா அல்லது ஸ்ரீ குண்டிசா யாத்திரை என்றும் அழைக்கப்படும் இந்த விழா, ஜகந்நாதர் தனது பிறப்பிடத்திற்கு மேற்கொண்ட புராணப் பயணத்தை நினைவுகூருகிறது.

திருவிழாவின்போது, பக்தர்கள் பெரும் திரளாகக் கூடி மூன்று தெய்வங்களின் தேர்களையும் சற்று தொலைவில் உள்ள குண்டிசா கோயிலுக்கு இழுத்துச் செல்கின்றனர். தெய்வங்கள் ஒரு வாரம் அங்கு தங்கியிருந்த பின்னர் ஜகந்நாதர் கோயிலுக்குத் திரும்புகின்றனர்.

‘பஹுடா யாத்திரை’ அல்லது ‘திரும்பும் பயணம்’ எனப்படும் இந்நிகழ்வுடன் திருவிழா நிறைவடைகிறது. ஜகந்நாதரின் நந்திகோஷ தேர், பலபத்ரரின் தலத்வஜ தேர் மற்றும் சுபத்ரா தேவியின் தர்ப்பதலன தேர் ஆகியவை திரும்பும் இந்நிகழ்வு ஆழ்ந்த ஆன்மிக மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்தது.

ரத யாத்திரையின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான புனித ‘ஆதார பன்னா’ சடங்கைக் காண பக்தர்கள் பூரியில் பெருமளவில் கூடுகின்றனர்.

இந்த சடங்கில், பால், சர்க்கரை மற்றும் பிற பொருட்களால் தயாரிக்கப்பட்ட புனித பானம், இறைவனின் வாய் வடிவில் செய்யப்பட்ட மண் பானைகளில் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது. பின்னர் அந்தப் பானைகள் தேர்களில் உடைக்கப்படுகின்றன. இந்த படையல் தெய்வங்களுக்கு மட்டுமே உரியதாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்ரீ ஜகந்நாதர் கோயிலில் வரவிருக்கும் ஸ்நான பூர்ணிமா மற்றும் ரத யாத்திரை திருவிழாக்களுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கோயில் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கே. பதீ தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

வரவிருக்கும் ஸ்நான பூர்ணிமா மற்றும் ரத யாத்திரை, அதாவது தேர்த் திருவிழாவுக்கான சடங்குகள் மற்றும் அட்டவணையை இறுதி செய்ய முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த இரு முக்கிய கொண்டாட்டங்களுக்கான சடங்குகளின் அட்டவணையை நாங்கள் இறுதி செய்துள்ளோம்.

இவ்விரு முக்கிய திருவிழாக்களையும் சுமுகமாக நடத்துவதற்கான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் விரிவான நிர்வாக ஏற்பாடுகள் குறித்தும் விவாதித்தோம். வரவிருக்கும் திருவிழாக்களுக்கான பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால், ரத்ன பண்டாரத்தின் சரக்குப் பட்டியல் தயாரிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இது பின்னர் மீண்டும் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பக்தர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுமுகமான தரிசனத்தை உறுதி செய்வதற்காக, கோயில் நிர்வாகம் திருவிழாக்களின் ஒவ்வொரு அம்சத்தையும் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

சடங்கு அட்டவணை, கூட்ட நெரிசல் மேலாண்மை மற்றும் செயல்பாட்டு ஏற்பாடுகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

Hindusthan Samachar / vidya.b