குடியிருப்பு பகுதிகளில் பாம்புகளை பிடிக்க புதுச்சேரி வனத்துறையின் மீட்புக்குழு உதவி எண்கள் அறிவிப்பு
புதுச்சேரி, 01 ஜூன் (ஹி.ச.) புதுச்சேரியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகளை பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விடுவதற்காக வனத்துறையின் சார்பில் சிறப்பு பாம்பு மீட்புக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களின்
புதுச்சேரியில் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகளை பிடிக்க வனத்துறையின் மீட்புக்குழு உதவி எண்கள் அறிவிப்பு


புதுச்சேரி, 01 ஜூன் (ஹி.ச.)

புதுச்சேரியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகளை பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விடுவதற்காக வனத்துறையின் சார்பில் சிறப்பு பாம்பு மீட்புக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடுகள், கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் காணப்பட்டால் பொதுமக்கள் அச்சமடையாமல், அவற்றை தாங்களாகவே பிடிக்கவோ, தாக்கவோ முயற்சிக்க வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பாம்புகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுபவை என்பதால், பயிற்சி பெற்ற மீட்பாளர்கள் மூலம் மட்டுமே அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவசர உதவிக்காக வனத்துறை பாம்பு மீட்பாளர்களின் தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது.

வனத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, பாம்புகளை கண்டால் கோபி அவர்களை 99481 39313 என்ற எண்ணிலும், சக்திவேல் அவர்களை 90474 59567 என்ற எண்ணிலும், வேலாயுதம் அவர்களை 96005 73080 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

அழைப்பு வந்தவுடன் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவர்.

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பாம்புகள் வெளியே வருவது அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், பாம்பு கடித்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b