சென்னையில் விமானக் கட்டணங்கள் கடும் உயர்வு - பயணிகள் அதிருப்தி
சென்னை, 01 ஜூன் (ஹி.ச.) கோடை விடுமுறை முடிவடைந்ததை அடுத்து, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவோரின் கூட்டம் விமான நிலையங்களில் அலைமோதத் தொடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுவதால், குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் ச
Steep Rise in Airfares in Chennai


சென்னை, 01 ஜூன் (ஹி.ச.)

கோடை விடுமுறை முடிவடைந்ததை அடுத்து, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவோரின் கூட்டம் விமான நிலையங்களில் அலைமோதத் தொடங்கியுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுவதால், குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் சென்ற லட்சக்கணக்கான மக்கள் சென்னைக்குத் திரும்பி வருகின்றனர்.

இதன் விளைவாக, தமிழகத்தின் பிற நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை வரும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

திடீர் தேவை அதிகரிப்பைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது பயணிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சில வழித்தடங்களில் கட்டணம் மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளதால், அவசரத் தேவைக்குப் பயணம் செய்ய வேண்டிய சாமானிய மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக, திருச்சியில் இருந்து சென்னைக்கு வழக்கமாக 4,500 ரூபாயாக இருந்த விமானக் கட்டணம் தற்போது 14,404 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதேபோல், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 6,600 ரூபாயாக இருந்த கட்டணம் 17,272 ரூபாயாகவும், கோவையில் இருந்து 4,744 ரூபாயாக இருந்த கட்டணம் 16,504 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வர 5,700 ரூபாயாக இருந்த டிக்கெட் விலை தற்போது 13,515 ரூபாயைத் தொட்டுள்ளது.

விமானக் கட்டணங்களின் இந்த அபரிமிதமான உயர்வு, குறைந்த நேரத்தில் சென்னை திரும்ப வேண்டிய பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் மருத்துவத் தேவைக்காக பயணிப்பவர்களை கடுமையாக பாதித்துள்ளது.

ரயில்களில் முன்பதிவு கிடைக்காத நிலையில், வேறு வழியின்றி பலர் இந்த அதிக கட்டணத்தைச் செலுத்தி பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பண்டிகைக் காலங்கள் மற்றும் விடுமுறை முடிவுகளின் போது தேவைக்கு ஏற்ப கட்டணங்கள் மாறுவது வழக்கம் என விமான நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டாலும், ஒரே நாளில் மூன்று மடங்கு கட்டண உயர்வு நியாயமற்றது என பயணிகள் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

கட்டணங்களை முறைப்படுத்த விமானப் போக்குவரத்துத் துறை உடனடியாக தலையிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b