Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 01 ஜூன் (ஹி.ச.)
தமிழக அரசால் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், கனிமவளத் துறையின் இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அப்துல்கலாம் அறிவியல் விவசாயிகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் ஏபல் மூர்த்தி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், இயற்கை வள ஆதாரத்துறையால் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட அரசாணை பொதுநலனுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பொதுமக்கள் நலன் சார்ந்த இந்த அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்கப்படவில்லை என்றும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அந்த அரசாணை இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த அரசாணை கனிமவள கொள்ளையர்களுக்கு சாதகமாக இருப்பதாக குற்றம்சாட்டிய மனுதாரர், அதை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, இதுகுறித்து கனிமவளத் துறையின் இயக்குனர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P