Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 01 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் மெயின் அருவியில் பராமரிப்பு பணி என்கின்ற பெயரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றாலம் மெயின் அருவியின் முன்பு இருந்த பாராம்பரியமிக்க அபாய வளைவு மற்றும் அருவியில் இருந்த சில சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்த நிலையில், பணிகளை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதனைத்தொடர்ந்து, முழுமையாக விசாரணை நடத்தி அருவிகளில் உள்ள சாமி சிலைகளை எக்காரணம் கொண்டு சேதப்படுத்தக் கூடாது எனக்கூறி பல்வேறு நிபந்தனைகளுடன் மீண்டும் பணிகளை தொடங்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்ற அனுமதியுடன் பணிகளானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பணிகளானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
குறிப்பாக, பாரம்பரியமிக்க பழைய அபாய வளைவு போல் சற்று பெரியதாக அபாய வளைவானது அமைக்கப்பட்டு தற்போது குற்றாலம் மெயின் அருவியின் தோற்றமானது புதுப்பொலிவு பெற்றுள்ளது.
மேலும், இறுதிக்கட்ட பணியாக தரைத்தளங்களில் பெரிய அளவிலான கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஓரிரு தினங்களில் இந்த பணிகளானது நிறைவு பெற்று இந்த வருட குற்றால சீசனுக்கு குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN