Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 01 ஜூன் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் சுங்கச்சாவடியில் இன்று முதல் புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, காய்கறிகள், அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் இந்த கட்டண உயர்வால் கூடுதல் செலவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சிரமத்தில் உள்ள போக்குவரத்து துறைக்கு இந்த சுங்கக் கட்டண உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தும் என வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுங்கக் கட்டண உயர்வால் சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிக்கும் நிலையில், அதன் தாக்கம் நேரடியாக அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காய்கறிகள், அரிசி, பழங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட தேவைக்கான பொருட்களின் விலை படிப்படியாக உயரக்கூடும் என்ற கவலை நிலவுகிறது.
அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக பாதிக்கும் இந்த கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தொடர்ந்து அதிகரித்து வரும் சுங்கக் கட்டணங்கள் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவையும் உயர்த்தும் என்பதால், மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN