5 மாதங்களுக்கு பிறகு நூல் விலை குறைப்பு - ஆடை உற்பத்தியாளர்கள் வரவேற்பு
திருப்பூர், 01 ஜூன் (ஹி.ச.) திருப்பூரில் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தித் துறையினருக்கு நிம்மதி அளிக்கும் வகையில், நூற்பாலைகள் நூல் விலையை கிலோவுக்கு ரூ.10 குறைத்து அறிவித்துள்ளன. நடப்பு ஆண்டில் தொடர்ந்து உயர்ந்து வந்த நூல் விலை, கடந்த 5 மாதங்களுக்க
Thread


திருப்பூர், 01 ஜூன் (ஹி.ச.)

திருப்பூரில் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தித் துறையினருக்கு நிம்மதி அளிக்கும் வகையில், நூற்பாலைகள் நூல் விலையை கிலோவுக்கு ரூ.10 குறைத்து அறிவித்துள்ளன.

நடப்பு ஆண்டில் தொடர்ந்து உயர்ந்து வந்த நூல் விலை, கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு தற்போது குறைக்கப்பட்டிருப்பது தொழில்துறையினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நூல் விலை படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த மே 16-ஆம் தேதி வரை கிலோவுக்கு மொத்தம் ரூ.61 வரை உயர்த்தப்பட்டிருந்தது.

இதனால் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பின்னலாடை மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

உற்பத்தி செலவுகள் அதிகரித்ததால் தொழில்துறையினர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில், மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த 11 சதவீத வரியை ரத்து செய்தது.

இதன் எதிரொலியாக பஞ்சு விலை குறையும் சூழல் உருவாகியுள்ளதால், நூற்பாலைகள் தற்போது நூல் விலையை கிலோவுக்கு ரூ.10 குறைத்து அறிவித்துள்ளன.

நூல் விலை குறைப்பு நடவடிக்கை ஆடை உற்பத்தியாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் அளித்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட விலை உயர்வுடன் ஒப்பிடுகையில் இந்த குறைப்பு போதுமானதாக இல்லை என்றும், மேலும் விலைக் குறைப்பு தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர், கோவை உள்ளிட்ட ஜவுளித் தொழில் மையங்களில் இந்த அறிவிப்பு வரவேற்கப்பட்டுள்ள நிலையில், நூல் விலை தொடர்ந்து குறைந்தால் உற்பத்தி செலவுகள் குறைந்து, ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தையில் போட்டித்திறன் அதிகரிக்கும் என தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN