முதலமைச்சர் விஜய் வருகை - திருச்சியில் இன்று காலை முதல் போக்குவரத்து மாற்றம் அமல்
திருச்சி, 01 ஜூன் (ஹி.ச.) தமிழக முதலமைச்சர் விஜய் இன்று திருச்சி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு, மாநகர காவல்துறை சார்பில் விரிவான போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் பாதுகாப்பு கருதியும், பொதுமக்களுக்கு ஏற்பட
Traffic changes implemented in Trichy


திருச்சி, 01 ஜூன் (ஹி.ச.)

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று திருச்சி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு, மாநகர காவல்துறை சார்பில் விரிவான போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் பாதுகாப்பு கருதியும், பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நோக்கிலும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை முதலே இந்த போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் (01.06.2026) இன்று திருச்சிராப்பள்ளி மாநகரத்திற்கு வருகை புரிவதால் இன்று காலை 10.00 மணி முதல் மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருவெறும்பூரிலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் மாநகர பேருந்துகள் அனைத்தும் மரக்கடை வழியாக மெயின்கார்டுகேட் காந்தி சிலை அருகில் பயணிகளை இறக்கி விட்டு மேல அரண்சாலை (W.B) வழியாக செல்ல வேண்டும்.

திருவாணைக்கோவில் வழியாக வரும் பேருந்துகள் அனைத்தும் மாம்பழசாலையில் இறக்கி விட்டு திரும்பி செல்ல வேண்டும். கரூர் சாலையிலிருந்து வரும் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் கே.டி சந்திப்பு, சாஸ்த்திரி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். கடலூர், பெரம்பலூர், அரியலூரிலிருந்து வரும் பேருந்துகள் திருவாணைக்கோவில் வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் கொள்ளிடம் புறவழி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்ல அனுமதியில்லை.

இன்று காலை 07.00 மணி முதல் மதுரையிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் துவரங்குறிச்சியிலிருந்து மணப்பாறை, குளித்தலை, முசிறி பெரம்பலூர் வழியாகவும், திண்டுக்கலிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் மணப்பாறையிலிருந்து குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாகவும், சென்னையிலிருந்து மதுரை, திண்டுக்கல் செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும்.

தஞ்சாவூர், புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து, அரியலூர் வழியாக செல்ல வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். தஞ்சாவூரிலிருந்து கரூர் செல்லும் கனரக வாகனங்கள் அரியலூர், பெரம்பலூர், துறையூர் வழியாக செல்ல வேண்டும். கரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலை, முசிறி, பெரம்பலூர், அரியலூர் வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தயாள் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் நிகழ்ச்சி நிரல் முடிந்து, அவர் புறப்படும் வரை இந்த போக்குவரத்து மாற்றங்கள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையின் அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி, மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அவசர தேவைகளுக்காக பயணிப்போர் போதிய கால அவகாசத்துடன் புறப்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b