Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை , 01 ஜூன் (ஹி.ச)
சென்னையில் மதுபானக் கூடத்தில் நடனமாடியபோது ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 18 வயது இளம்பெண் ஒருவர் கோயம்பேடு மேம்பாலம் அருகே கார் ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இளைஞர்களின் கவனத்தை விளையாட்டின் பக்கம் திருப்ப வேண்டும் என்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்து முழுமை பெற வேண்டுமெனில், தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகையான போதைப்பொருட்களின் விற்பனையையும் முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்ற நாளில் அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையையே இதுவரை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியாத நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, இளம்பெண் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் மதுபானக் கூடங்களை மூடுவதோடு, அங்கு சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ