Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூன் (ஹி.ச)
தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அவரது மறைவை அடுத்து, அவரது உடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய ரஜினிகாந்த், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தமிழ் திரையுலகில் யதார்த்த சினிமாவுக்கு வித்திட்ட பாரதிராஜா இயக்கத்தில், ரஜினிகாந்த் தனது ஆரம்ப காலகட்டத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
1977ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் பரட்டை என்ற வில்லன் கதாபாத்திரம் மூலம் ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பாரதிராஜா.
அதனைத் தொடர்ந்து ‘கொடி பறக்குது’ உள்ளிட்ட படங்களிலும் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
கிராமத்து மண் வாசனையுடன் கூடிய கதைகளை படமாக்குவதில் வல்லவரான பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு என திரையுலகினர் உருக்கமாக தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b