தொழில்நுட்பக் கோளாறா, ஊடகத் தணிக்கையா? – தமிழக அரசுக்கு அதிமுக சரமாரி கேள்வி
சென்னை, 10 ஜூன் (ஹி.ச.) தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து மூன்று தொலைக்காட்சி சேனல்கள் நீக்கப்பட்டதாக வெளியான தகவலை “தவறான செய்தி” எனக் குறிப்பிட்ட தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் விளக்கத்தை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக
ADMK Head Quaters


Hh


சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)

தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து மூன்று தொலைக்காட்சி சேனல்கள் நீக்கப்பட்டதாக வெளியான தகவலை “தவறான செய்தி” எனக் குறிப்பிட்ட தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் விளக்கத்தை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் தொலைக்காட்சி, நியூஸ் தமிழ் 24×7 மற்றும் ஜனம் தமிழ் ஆகிய சேனல்கள் நீக்கப்பட்டதாக வெளியான தகவலை தகவல் சரிபார்ப்பகம் தொழில்நுட்பக் கோளாறு என விளக்கியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த பதிவில், “அது என்ன தொழில்நுட்பக் கோளாறு? கடந்த ஐந்து ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும்போது நேரலை ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டதுபோன்ற கோளாறா?” என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், இந்த மூன்று சேனல்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சன் நியூஸ் சேனலை இந்த அரசால் முடக்க முடியாதது ஏன் என்றும், அவ்வாறு செய்தால் சன் குழுமத்தின் அனைத்து சேனல்களும் விலகிச் செல்லும் என்ற அச்சம் காரணமா என்றும் விமர்சித்துள்ளது.

அத்துடன், தகவல் சரிபார்ப்பகத்தின் மீது தொடரப்பட்டிருந்த வழக்கை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் திரும்பப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ள அதிமுக, 2023-ஆம் ஆண்டு அந்த அமைப்பை அரசியலமைப்புக்கு முரணானது என விமர்சித்தவர், தற்போது அதனை ஏற்றுக்கொண்டது எப்படி என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

கட்சி மற்றும் ஆட்சி மாறுவதால் ஒரு அமைப்பின் அரசியலமைப்பு தகுதி மாறிவிடுமா என்றும் அதிமுக தனது பதிவில் சாடியுள்ளது.

மேலும், “தகவல் சரிபார்ப்பகம்” என்பதை விட “த.வெ.க. உருட்டகம்” என்ற பெயரே அந்த அமைப்புக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ