காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நெற்பயிர்கள் - தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
சென்னை, 10 ஜூன் (ஹி.ச) தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவை பருவ நெற்பயிர்கள், போதிய நீர்ப்பாசனம் இல்லாததால் கருகத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர
Anbumani


சென்னை, 10 ஜூன் (ஹி.ச)

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவை பருவ நெற்பயிர்கள், போதிய நீர்ப்பாசனம் இல்லாததால் கருகத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், இந்த ஆண்டு அதற்கான வாய்ப்பு இல்லாததால், நிலத்தடி நீரை நம்பி கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பே நடவு செய்யப்பட்ட பயிர்கள் தற்போது நன்றாக வளர்ந்துள்ள நிலையில், முறையான நீர்ப்பாசனம் வழங்கப்பட்டால் இன்னும் சில வாரங்களில் கதிர் விடும் நிலையை எட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த சில வாரங்களாக காவிரி பாசன மாவட்டங்களில் போதிய அளவில் மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால், நீர் இறைப்பான்கள் மூலம் நிலத்தடி நீரை பாய்ச்ச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக வயல்வெளிகள் வெடித்து வறண்டு வருவதோடு, நெற்பயிர்களும் கருகத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விதை, நடவு, உரம் மற்றும் களையெடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை விவசாயிகள் செலவழித்துள்ளதாகக் கூறிய அவர், தற்போதைய நிலையில் பயிர்கள் பாதிக்கப்பட்டால் உழவர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நெற்பயிர்களைக் காப்பாற்றுவதற்காக நாளொன்றுக்கு குறைந்தது 18 மணி நேரம் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், வழக்கமாக வழங்கப்படும் குறுவைத் தொகுப்புடன் கூடுதலாக ரூ.5,000 இடுபொருள் மானியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ