அனைத்து அரசு சேவைகளும் ஒரே செயலியில் - அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவு
அமராவதி, 10 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச மக்களுக்கு அனைத்து அரசு சேவைகளையும் எளிதாக வழங்கும் வகையில், ஒரே மொபைல் செயலியை உருவாக்க அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். தற்போது செயல்பாட்டில் உள்ள ‘மன மித்ரா’ வாட்ஸ்அப் த
A


அமராவதி, 10 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச மக்களுக்கு அனைத்து அரசு சேவைகளையும் எளிதாக வழங்கும் வகையில், ஒரே மொபைல் செயலியை உருவாக்க அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது செயல்பாட்டில் உள்ள ‘மன மித்ரா’ வாட்ஸ்அப் தளத்தின் தொடர்ச்சியாக இந்த செயலி உருவாக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை பெற முடியும் என்று கூறினார்.

முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தனது முகாம் அலுவலகத்தில் ரியல் டைம் கவர்னன்ஸ் சொசைட்டி (ஆர்.டி.ஜி.எஸ்.) மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் இந்த உத்தரவுகளை வழங்கினார்.

நகர்ப்புறங்களைப் போலவே கிராமப்புற மக்களிடையிலும் ‘மன மித்ரா’ சேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் குடிநீர் தரம் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், தினமும் குடிநீர் மாதிரிகளை பரிசோதித்து பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், சுகாதாரப் பணிகளில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், ‘ஜலதாரா’ போன்ற திட்டங்கள் மூலம் மழைநீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அனந்தபூர் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான அரசு நில பாதுகாப்பு திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கஞ்சா சாகுபடியை முற்றிலுமாக ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் ‘அவேர்’ அமைப்புகள் மூலம் மாநில அரசு செயல்படுத்தி வரும் நவீன நிர்வாக முறைகள் மீது மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாகவும், விரைவில் நடைபெற உள்ள நீதி ஆயோக் கூட்டத்தில் அவை குறித்து விளக்க உள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அரசு துறைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA