Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)
மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட உலகில் கிராமிய மண்வாசனையை திரையில் உயிர்ப்பித்து, தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிய பாரதிராஜாவின் மறைவுக்கு தமிழகம் முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது கலைப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி, பாரதிராஜாவின் இறுதி ஊர்வலம் மற்றும் அடக்க நிகழ்வுகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளன. காவல்துறை அணிவகுப்பு, அரசு சார்பிலான இறுதி மரியாதை உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் இறுதி அஞ்சலியில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கிய படைப்பாளியாக போற்றப்படும் பாரதிராஜாவின் மறைவு, தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக கருதப்படுகிறது. அவரது நினைவைப் போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுவது திரையுலகினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam