பாரதிராஜா மறைவு தமிழ்ச் சமூகத்திற்கே பேரிழப்பு – திருமாவளவன் இரங்கல்
சென்னை, 10 ஜூன் (ஹி.ச) புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரையுலகின் திசைவழிப் போக்கை மடை
Thiruma


Hh


சென்னை, 10 ஜூன் (ஹி.ச)

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

திரையுலகின் திசைவழிப் போக்கை மடைமாற்றம் செய்த பேராளுமை இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு பெரும் துயரமளிக்கிறது.

தவிர்க்க இயலாத நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக புதுதில்லியில் இருப்பதால், அவரது திருவுடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக பெரிதும் வருந்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன் மீது பேரன்பு கொண்டவராக பாரதிராஜா இருந்ததாக நினைவுகூர்ந்த அவர்,

தனது தந்தையிடம் தன்னை அறிமுகப்படுத்திய நிகழ்வையும், நீயும் என் பிள்ளைதான் தம்பி என்று பாரதிராஜாவின் தந்தை கூறிய சம்பவத்தையும் உணர்வுபூர்வமாக பகிர்ந்துள்ளார்.

திரையுலகில் அரை நூற்றாண்டுக்கு முன்பே புதிய பாதையை உருவாக்கிய பாரதிராஜா, அதீத ஒப்பனைகளிலிருந்து தமிழ்த் திரைப்படங்களை மீட்டு, எளிய மக்களின் இயல்பான வாழ்வியலை திரையில் பதிவு செய்தவர் என்று திருமாவளவன் பாராட்டியுள்ளார்.

குறிப்பாக வேதம் புதிது திரைப்படத்தின் மூலம் சாதியத்திற்கு எதிரான புரட்சிகர சிந்தனைகளை விதைத்தவர் என்றும், நடிகர் சத்யராஜ் மூலம் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான வலுவான கருத்துகளை பதிவு செய்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இளந்தலைமுறையினரின் நெஞ்சில் சாதி நஞ்சைப் பாய்ச்ச வேண்டாம் என்ற அவரது சிந்தனை, தமிழகத்தில் அம்பேத்கரிய கருத்துகள் பரவலாக பேசப்படாத காலத்திலேயே சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், சாதி ஒழிப்பை வலியுறுத்திய அவரது படைப்புகள் தமிழ்ச் சமூகத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, பாரதிராஜாவின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கும் கலையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு எனக் குறிப்பிட்ட திருமாவளவன், அவருக்கு வீர வணக்கம் செலுத்துவதுடன், அவரது குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ