Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 10 ஜூன் (ஹி.ச.)
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த கொடூர வழக்கில் சூலூர் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு, 21 நாட்களுக்குள் விசாரணையை நிறைவு செய்து கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சூலூர் காவல் நிலைய போலீசார் இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போக்சோ சட்டம் உட்பட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த குறுகிய காலத்திற்குள் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் தடயவியல் அறிக்கைகளை திரட்டி காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவில் அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் காவல்துறையின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை விரைவில் போக்சோ நீதிமன்றத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b