காதல் மோசடி வழக்கு -பெண்ணின் உடல்நிலை, கருக்கலைப்பு விதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 10 ஜூன் (ஹி.ச.) நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காதலித்து ஏமாற்றியதாக கூறி போலீசார் விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தக் கூடாது எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், சென்னை அண்ணா பல்கலைக
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காதலித்து ஏமாற்றியதாக கூறி போலீசார் விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தக் கூடாது எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருவதாகவும், தங்களது பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் மட்டுமே இருந்ததாகவும், காதல் தொடர்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த இளம்பெண் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக தனது தாயாரிடம் புகார் தெரிவித்ததையடுத்து,

வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு அழைத்ததாகவும், எனவே போலீசார் துன்புறுத்துவதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நெல்லை மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அதில், சம்பந்தப்பட்ட பெண்ணின் ஹீமோகுளோபின் அளவு 7.5 ஆக மிகவும் குறைவாக இருப்பதால், முதலில் ரத்தம் ஏற்றப்பட்டு உடல்நிலை சீராக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்புவதாக அவரது தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பெண்ணின் உடல்நிலையே முதன்மையானது எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவரின் தற்போதைய உடல்நிலை, கருக்கலைப்பு செய்வதற்கான சட்ட விதிமுறைகள் மற்றும் மருத்துவ நெறிமுறைகள் குறித்து விரிவான அறிக்கையை நெல்லை மருத்துவக் கல்லூரி முதல்வர் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும், பெண் குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அந்தக் குழந்தையை அரசு ஏற்று பராமரிக்குமா என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam